உள்ளூர் செய்திகள்
கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் சாவு
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த தஞ்சை கல்லூரி மாணவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முகுந்தன், தஞ்சாவூரை சேர்ந்த ராஜஸ்ரீ, வேதராண்யத்தைச் சேர்ந்த அபிசேக், கும்பகோணத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், நீடாமங்கலத்தைச் சேர்ந்த தினகரன், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுதர்ஷன், மதுரையைச் சேர்ந்த பாண்டியம்மாள், புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுசுயா ஆகியோர் நேற்று மாலை வந்து தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கடலில் ஆற்று முகத்தூவாரம் அருகே 8 மாணவர்களும் குளித்துள்ளனர். அப்போது முகுந்தன் மற்றும் ராஜஸ்ரீ இருவரும் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் சக மாணவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து ராஜஸ்ரீயை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடல் அலையில் இழுத்துச் சென்ற மாணவர் முகுந்தனை தேடிய நிலையில் வேளாங்கண்ணி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளார்.
இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த முகுந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் எட்டு பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது