உள்ளூர் செய்திகள்
நகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்
சிவகங்கையில் நகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்
சிவகங்கை
சிவகங்கை நகராட்சியை தூய்மைமிகு நகராட்சியாக மாற்றுவதற்காக நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காந்தி வீதியில் நடந்த ஆய்வில் 595 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று நேரு பஜார் வீதியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சில வியாபாரிகள் கடைகளை அடைத்துக்கொண்டு நகராட்சி ஊழியர்களை சோதனை செய்யவிடாமல் தடுத்ததுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்பட்டனர்.
மேலும் சாலையில் வியாபாரிகள் கூடியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அங்கு வந்த காவல்துறையினர் சமாதானம் செய்ததை தொடர்ந்து நடந்த சோதனையில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடைகளுக்கு அபராதமும் விதித்து சென்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்ச்சிகளுக்கும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கப் மூலம் டீ, காப்பி தருகின்றனர்.
பிளாஸ்டிக் உற்பத்தி செய்து மாவட்டத்தின் உள்ளே வருவதை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை வேண்டும். எங்களைப் போன்று சிறு, குறு வியாபாரிகள் பிளாஸ்டிக் கவர் இல்லாமல் பார்சல் செய்து எவ்வாறு கொடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.
எனவே நகராட்சி நிர்வாகம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.