உள்ளூர் செய்திகள்
ப.சிதம்பரம்

எம்.பி. பதவி: ப.சிதம்பரத்துக்கு சோனியா ஆதரவு- கே.எஸ்.அழகிரி அதிர்ச்சி

Published On 2022-05-25 06:02 GMT   |   Update On 2022-05-25 06:02 GMT
பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க சிதம்பரம் தான் சரியான நபராக இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கருதுகிறார்.

சென்னை:

பாராளுமன்ற மேல் சபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய டெல்லியில் ஆலோசனை நடந்து வருகிறது.

தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபைக்கு செல்ல மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்.பி.யாக தேர்வாக வேண்டும் என்று தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், எம்.பி. பதவியை கேட்கிறார். அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது போட்டியிடாமல் பிரசாரம் செய்ததால் தனக்கு மேல்சபையில் வாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே முன்னாள் எம்.பி. விஸ்வநாதனும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்டு வருகிறார். காங்கிரஸ் மேலிட தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தியும் ஓசையின்றி எம்.பி. பதவியை கைப்பற்ற காய்களை நகர்த்தியுள்ளார்.

தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுக்க முடியும் என்ற நிலையில் 4 பேரிடையே போட்டி நிலவுகிறது. இதில் ப.சிதம்பரத்துக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க சிதம்பரம் தான் சரியான நபராக இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கருதுகிறார்.

எனவே ப.சிதம்பரத்துக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சோனியா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்காவுக்கு சட்ட ஆலோசகராக ப.சிதம்பரம் திகழ்கிறார். இதனால் பிரியங்காவின் ஆதரவும் சிதம்பரத்துக்குத்தான் உள்ளது. எனவே ப.சிதம்பரம் தேர்வாக 99 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மேலிட தலைவர்கள் சிலர் மூலம் கே.எஸ்.அழகிரி ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்காததால் அவர் சற்று அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார்.

முன்னாள் எம்.பி. விஸ்வநாதனை பொருத்த வரை அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபாலை நம்பி களம் இறங்கி உள்ளார். இன்று காலையில் கூட கே.சி.வேணு கோபாலுடன் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் விஸ்வநாதன் கலந்துகொண்டார். என்றாலும் விஸ்வநாதனுக்கு எம்.பி. ஆகும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமே.

காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் பிரவீன் சக்ரவர்த்திக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. புது முகங்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரவீனை, ராகுல் ஆதரிக்கிறார். மேலும் ஒருகுடும்பத்தில் ஒருவருக்கு பதவி என்ற அடிப்படையில் சிதம்பரத்துக்கு வாய்ப்பு கொடுக்க ராகுல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

என்றாலும் சோனியாவும், பிரியங்காவும் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக இருப்பதால் ராகுலும் கடைசியில் விட்டுக்கொடுத்து விடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News