உள்ளூர் செய்திகள்
தி.மு.க. பிரமுகர் கொலை

தி.மு.க. பிரமுகர் கொலை: 2 வாரம் ஆகியும் தலை கிடைக்கவில்லை- உடலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவு

Published On 2022-05-24 17:53 IST   |   Update On 2022-05-24 17:53:00 IST
2 வாரம் ஆகியும் தலை கிடைக்காத பட்சத்தில் உடல் பாகங்களை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாமா என்றும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:

வடசென்னையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சக்கரபாணி. மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தார். திருவொற்றியூர் 7-வது வார்டு தி.மு.க. பகுதி பிரதிநிதியாக இருந்தார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.

கடந்த 10-ந்தேதி சக்கரபாணி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன் நாகேந்திரன் மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அது ராயபுரம் கிரேஸ் கார்டன் 3-வது தெருவை காட்டியது. போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்திய போது ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வீட்டில் சோதனை நடத்திய போது கழிவறைக்குள் சக்கரபாணியின் உடல் இருந்தது.

அந்த வீட்டில் வசித்து வந்த தமீம்பானுவிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிய போது சக்கரபாணிக்கும், தமீம்பானுவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

கடந்த 10-ந்தேதி தமீம்பானுவுடன் சக்கரபாணி உல்லாசம் அனுபவித்தார். அப்போது மேல் வீட்டில் வசித்து வந்த தமீம்பானுவின் சகோதரர் வாசிம் பாஷா இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது சக்கரபாணி தன்னை மிரட்டி உறவு கொள்வதாக தமீம்பானு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வாசிம் பாஷா கத்தியால் சக்கரபாணியை குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்தார்.

இதையடுத்து இருவரும் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டினார்கள். அதே தெருவில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் டில்லிபாபு என்பவரின் உதவியுடன் சக்கர பாணியின் தலையை வாசிம் பாஷா அடையாறு திரு.வி.க. பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் வீசினர்.

வயிறு மற்றும் குடல் பகுதிகளை காசிமேடு கடலில் வீசினார்கள். மீதமுள்ள பகுதிகளை வெளியே எடுத்துச்சென்று போடுவதற்குள் போலீசார் கண்டுபிடித்து விட்டனர். இதையடுத்து தமீம்பானு, வாசிம் பாஷா, டில்லி பாபு ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் அடையாறு ஆற்றில் பைபர் படகு மூலம் தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 வாரங்களாக தீவிரமாக தேடியும் சக்கரபாணியின் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து தேடி வந்தனர். மீனவர்களின் உதவியுடன் தேடிப்பார்த்தாலும் தலை கிடைக்கவில்லை.

சக்கரபாணியின் உடல் பாகங்கள் மட்டும் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளது. அதனை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் வர 2 வாரங்கள் ஆகும். தலை கிடைக்காத பட்சத்தில் உடல் பாகங்களை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாமா என்றும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News