உள்ளூர் செய்திகள்
கற்களுடன் வந்து மனுகொடுத்தவர்கள்.

நெல்லை கல்குவாரி விபத்து சம்பவத்தில் கனிம வளத்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும்- கற்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2022-05-23 10:04 GMT   |   Update On 2022-05-23 10:04 GMT
நெல்லை கல்குவாரி விபத்து சம்பவத்தில் கனிம வளத்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என கற்களுடன் ஏராளமானோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்பன் பாண்டியன் தலைமையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜபார், ஜமால், நிர்வாகிகள் நடராஜன், பீட்டர், பாலமுருகன் உள்பட ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர்.

அதில், கல்குவாரி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான கனிமவளத்துறை உதவி இயக்குனரை அரசு ‘சஸ்பெண்டு’ செய்துள்ளது அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

திருப்பணிகரிசல்குளம் சேர்ந்த விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் முத்துமாரி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

 திருப்பணிகரிசல்குளம் குளத்திற்கு சிறுக்கன்குறிச்சி வேளார் குளம், வெட்டுவான் குளம், வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மழைநீர் வரக்கூடிய பாதையின் ஓடையின் குறுக்கே பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் 60 அடி நீளத்தில் தடுப்புச் சுவர் ஒன்று கட்டப்படுகின்றது. இதனால் குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை தடைபடுகிறது. எனவே இந்த கட்டுமான பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.

தேவர்குளம் அருகே உள்ள வட தலைவன் பட்டியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வாரம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கப்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குகிறார்கள்.

 ஒருதலைப்பட்சமாக வேலை வழங்குவதை தடுத்து நிறுத்தி அனைவருக்கும் வாரத்தில் 5 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
Tags:    

Similar News