உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கி பகுதியில் தூர் வாரப்படாமல் புதர் மண்டிக்கிடக்கும் கால்வாய்களை படத்தில் காணலாம்.

கல்லணை கால்வாய் கடைமடை பகுதிகளை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-05-22 14:28 IST   |   Update On 2022-05-22 14:28:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் பாசன வசதி பெறும் வகையில் கல்லணை கால்வாய் கடைமடை பகுதிகளை உடனடியாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். 

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, ஓரிரு வாரங்களில் கடைமடை பகுதியை தண்ணீர் வந்தடையும்.

இந்நிலையில் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் நலன் கருதி முன் கூட்டியே மே 24-ந்தேதி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். 

வழக்கமாக ஜுன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடக் கூடிய சூழ்நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட இருப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் தங்களது பணியை தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில் கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் இன்னும் வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ் கூறுகையில், கடந்த ஆண்டு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிற சமையத்தில் வாய்க்கால்களை தூர் வாருவதற்கான டெண்டர் விடப்பட்டது. 

அதனையடுத்து ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இரண்டு, மூன்று தினங்களிலேயே தண்ணீர் வந்தடைந்தால் பணிகள் முழுமையாக நடைபெறாமல் போனது. இந்நிலையில் இந்தாண்டும் அதே போன்று தண்ணீர் திறந்து விட குறுகிய நாட்களே உள்ள நிலையில் இன்னும் வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் உள்ளது. 

எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் அதிகபடியான எந்திரங்களை கொண்டு, மேற்பனைக்காடு முதல் மும்பாலை வரை உள்ள தாய்வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களை தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கம் சார்பாக கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

Similar News