உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வனப்பகுதியை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Update: 2022-05-21 08:01 GMT
இயற்கையை காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படும் என ஊட்டியில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஊட்டி:

ஊட்டியில் இன்று நடந்த அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. அரசு அமைகிற போதெல்லாம் நீலகிரி மாவட்ட முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை ஆற்றி இருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த சாதனை என்னவென்றால் பேருந்துகளை நாட்டுடமையாக்கியது தான். இந்த வராலற்று சிறப்பு மிக்க திட்டத்தை ஊட்டியில் தான் தொடங்கி வைத்தார்.

ஊட்டி ஏரியை 1970-ம் ஆண்டு புதுப்பொலிவோடு சீரமைத்து தந்தவர் கருணாநிதி. சுற்றுலா மாளிகை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தவர், முதுமலை சரணாலயத்தை விரிவுபடுத்த திட்ட அறிக்கை கொடுத்தவர் கருணாநிதி.

தேயிலை விலை வீழ்ச்சியடைந்த நேரத்தில் அவர்களுக்கு மானியம் வழங்கியவர் கருணாநிதி. நீலகிரியில் பழங்குடி மக்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு, தொலைக்காட்சி பெட்டிகளையும் என நீலகிரி மாவட்டத்திற்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கருணாநிதி செய்து கொடுத்துள்ளார்.

நான் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது ஊட்டிக்கு 3-வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து, குடிநீர் தேவையை தீர்த்து வைத்தேன். இப்படி பல்வேறு பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

நீலகிரியில் 2019-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டு மிக மோசமானது. உடனே நான் நீலகிரி வந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்த்தேன். 2 நாள் தங்கி இந்த பகுதிகளை பார்த்து வீடு இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினோம். சாலைகள் பழுதடைந்திருந்தாலும் பயணித்து மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் மக்களுக்கு பணியாற்றிய ஒரு மாபெரும் இயக்கம் தான் திராவிட இயக்கம்.

தி.மு.க அரசு அமைந்து ஓராண்டில் எண்ணற்ற நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இயற்கையும், மனிதனும் வாழும் இந்த வனபகுதியை பாதுகாக்க, இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் வனப்புறத்தை பெருக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள வனப்புறத்தை 20.27 விழுக்காடில் இருந்து 33 விழுக்காடு உயர்த்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளோம். நீலகிரி நிலத்தையும் மக்களையும் தமிழக அரசு காக்கும். இயற்கையை காக்க கூடிய அரசாக தமிழக அரசு செயல்படும்.

மாநிலத்தின் வனப்பகுதிகளை பெருக்குவதோடு, வனவிலங்குகளை பராமரிக்க அரசு கவனம் செலுத்தும். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம், சுற்றுச்சூழல் வளாகம் ஏற்படுத்தப்படும். காட்டு விலங்குகளை மீட்டு உருவாக்கம் செய்வதற்கு இந்த அரசு முயன்று வருகிறது. இதற்கு அந்நிய களை தாவரங்களை அழித்தாக வேண்டும். உள்ளூர் தாவர இனங்களை வளர்ச்சியை மட்டுப்படுத்தவோடு, மாநிலத்தில் பல்லுயிர் தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. அன்னிய தாவரங்களை அகற்ற ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு இதற்கான பணி நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். நீலகிரியில் எண்ணற்ற காய்கறிகள், பழங்கள் விளைவிக்கப்படுகிறது. நீலகிரியில் குறிப்பிடத்தக்க சி.டி.சி தேயிலை, தொன்மை வாய்ந்த தேயிலை உள்ளது. இவை உள்நாடு மற்றும் வெளிநாட்டு தேவைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.நீலகிரி மாவட்ட பொருளாதார மேம்பாட்டுக்கு உள்ளூர் உழவர்களுக்கு விளைவிக்கு பொருட்களை மதிப்புகூட்டி ஏற்றுமதி செய்ய பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த மையம் மாவட்டத்தின் லட்சக்கணக்கான விவசாயிகள் உற்பத்தி செய்யும், காய்கறி, பழ வகைகள், காபி, தேயிலை உள்ளிட்ட உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும்.

இந்த மையத்தினை வல்லுநர்கள் வழிகாட்டுதல் படி சிறந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, உள்ளூர் விவசாயிகள் இயற்கை வேளாண்மை செய்ய ஆங்காங்கே வள மையம் அமைக்கப்படும்.

சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இந்த மாவட்டத்தில் சுற்றுலா வழிகாட்டி, குதிரை சவாரி, வாடகை கார் ஓட்டுபவர், சிறு வியாபாரிகள் என சுற்றுலா தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கி, தமிழ்நாடு அமைப்புசார நலவாரிய உறுப்பினர்களாக சேர்த்து வாரியத்தின் அனைத்து திட்டங்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இந்த பகுதி மக்களின் கோரிக்கை 17 ஏ நிலங்களில் குடியிருப்பவர்களின் பிரச்சினை, டேன் டீ பிரச்சினை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, இதற்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, ஊட்டி, குந்தா, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் ஆகிய பகுதிகளை நீலகிரி பிளான் ஏரியாவாக இந்த அரசு அறிவித்துள்ளது. இதற்கான மண்டல திட்டத்தை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தை பாதுகாப்பது தமிழகத்தை பாதுகாப்பதற்கு சமம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News