உள்ளூர் செய்திகள்
கைதான 2 பேர்

2 பேர் கைது

Published On 2022-05-20 17:05 IST   |   Update On 2022-05-20 17:05:00 IST
மதுரையில் டிராவல்ஸ் அதிபரை தாக்கி 3 பவுன் செயின்-செல்போன்கள் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை

மதுரை மங்கலக்குடி, பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 39). இவர் அந்த  பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம்  நடத்தி வருகிறார்.  

சம்பவத்தன்று காலை தினேஷ்குமார் வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு அருகே 5 பேர் கும்பல் ஒன்றாக உட்கார்ந்து மது  அருந்தி கொண்டு இருந்தது.   இதனை தினேஷ்குமார் அவர்களை தட்டி கேட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் பீர் பாட்டிலால் தினேஷ்கு மாரை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை பறித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. 

இதுதொடர்பாக தினேஷ்குமார் ஒத்தகடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், ஊமச்சிகுளம் டி.எஸ்.பி.  காட்வின் ஜெகதீஷ் குமார் ஆலோசனை பேரில், ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் முருகேசன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். 

இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து வந்து, காவல் நிலையத்தில் விசாரித்தனர். இதில் அவர்கள் தேத்தான்குளம் சேகர் மகன் அருணாச்சலம் (வயது 24), புதுப்பட்டி முத்துக்குமார் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப் பட்டனர்.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் தினேஷ்குமாரிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிய கொட்டகைமேடு அமீர், பாபா நகர் வசந்த், அலங்காநல்லூர் அயன்ராஜ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News