உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டபோது எடுத்தப்படம்.

கல்விக் கடன் வழங்குவதில் குளறுபடியால் வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2022-05-20 15:24 IST   |   Update On 2022-05-20 15:24:00 IST
காரிமங்கலம் அருகே கல்விக் கடன் வழங்குதல் உட்பட பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரிமங்கலம், 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பஞ்சா யத்தில் தருமபுரி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் ஓய்வூதியர் என நூற்றுக்கணக்கானோர் கணக்கு வைத்துள்ளனர். 

வங்கி மேலாளராக ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கியில் கடந்த பல மாதங்களாக கல்வி கடன் யாருக்கும் வழங்கப்படவில்லை. 
சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்து அதற்குரிய சான்றுகளை கொடுத்தும் வங்கி மேலாளர் கடன் தராமல் அவர்களை அலைக்கழித்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. 

வங்கி டெபாசிட் தொகை திரும்ப பெறுவதற்கு பொதுமக்கள் நடையாய் நடந்து வருகின்றனர். இதைத் தவிர நகை கடன் மீட்பு மற்றும் பயிர் கடன் உட்பட அனைத்து வங்கி பணிகளிலும் குளறுபடி நிலை வருவதாக பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர். 

நேற்று வங்கி கடன் வழங்குவது குறித்து பொதுமக்களுக்கும் வங்கி மேலாளருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
தகவலறிந்த திமுக ஒன்றிய செயலாளர் குமரவேல் ஓய்வுபெற்ற பஞ்சாயத்து உதவி இயக்குனர் சென்னையன் முன்னாள் கவுன்சிலர் பாரதிராஜா மற்றும் பொதுமக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் வங்கியை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். ஒருகட்டத்தில் வங்கி மேலாளர் பிரசாத் அருகில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க செல்வதாக கூறி அவசரமாக அங்கிருந்து வெளியேறினார். 

பொதுமக்கள் முற்றுகை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த சில நாட்களில் பொதுமக்களை திரட்டி வங்கி நிர்வாகத்தை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என திமுக ஒன்றிய செயலாளர் குமரவேல் தெரிவித்தார்.

Similar News