உள்ளூர் செய்திகள்
கைது

ஒரே நாளில் 3 இடங்களில் மோதல்- கல்லூரி மாணவர்கள் 8 பேர் அதிரடி கைது

Published On 2022-05-18 06:19 GMT   |   Update On 2022-05-18 06:19 GMT
மோதல் சம்பவங்களில் கீழ்ப்பாக்கம் போலீசார் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது ஆயுதங்களை வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை:

சென்னையில் கல்லூரி மாணவர்கள் ரூட் தல போட்டியில் மோதிக்கொள்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

இருப்பினும் மாணவர்களின் மோதல் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டே வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் ஒரே நாளில் 3 இடங்களில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு ரகளை செய்தனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இது தொடர்பாக 8 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ராயப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் வழியாக பாரிமுனை (தடம் எண்.21) சென்ற சென்னை மாநகர பஸ்சில் பயணம் செய்து வந்த சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் அனைவரும் கண்டக்டரிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளனர்.

இதனால் டிரைவர் பஸ்சை பல்லவன் சாலையில் நிறுத்தி உள்ளார். தொடர்ந்து பஸ்சில் உள்ள மாணவர்கள் அனைவரும் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து கல்லால் தாக்கினர். இந்த தாக்குதலில் பஸ்சின் கண்டக்டருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள பல்லவன் பணிமனையில் பணிபுரியும் கண்டக்டர்கள் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து சமாதானம் செய்தபோது, அவர்களையும் கை மற்றும் கால்களில் தாக்கி ரத்த காயத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக டிரைவர் சங்கர் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஒரு சிறுவன் மற்றும் அப்துல் முத்தலிப், லோகேஷ் ஆகிய கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஹாரிங்டன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் கத்தி, பாட்டில்கள் மற்றும் கற்களால் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக ரூட் தல மாணவர்களான கிஷோர், பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய கத்தி, கண்ணாடி பாட்டில்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய மற்ற மாணவர்களை சி.சி.டி.வி. கேமரா மூலம் அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்களான அண்ணாநகரைச் சேர்ந்த ஹமீதுஅலி உசாமா மற்றும் மண்ணடியைச் சேர்ந்த அப்துல்ரகீம் ஆகியோருக்கும் ராயப்பேட்டையைச் சேர்ந்த ரக்கியூம் அகமது என்ற மாணவருக்கும் இடையே புதுக்கல்லூரி வளாகத்தில் வைத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ரக்கியூம் அகமது தாக்கப்பட்டார். இதற்கு பழிவாங்கும் வகையில் ரக்கியூம் அகமது, தனது நண்பர்களான முகாதிக், உமர்பரூக் ஆகியோருடன் சேர்ந்து கல்லூரி வாசலில் வைத்த உசாமா, அப்துல்ரகீம் இருவரையும் உருட்டு கட்டையால் தாக்கி உள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில், ரக்கியூம் அகமது, முசாதிக், உமர்பரூக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவங்களில் கீழ்ப்பாக்கம் போலீசார் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது ஆயுதங்களை வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவர்கள் மீதான இந்த நடவடிக்கை தொடரும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News