உள்ளூர் செய்திகள்
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 1-ந் தேதி முதல் சீரமைப்பு- போக்குவரத்து மாற்றம்
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 1-ந் தேதி முதல் சீரமைப்பு செய்ய உள்ளதால் வேலூர்-சித்தூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் ஓடுத்தளத்தின் இணைப்புகள் வலுவிழந்துள்ளதால் அதனை சீர் செய்ய ரெயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை உத்தேசித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் பணிகள் தொடங்க முடிவு செய்தனர். ஆனால் ஏப்ரல் மாதத்தில் பள்ளி மாணவர்களின் தேர்வுகளுக்காகவும், சில நிர்வாக காரணங்களுக்காகவும் சீரமைப்பு பணி தற்காலி கமாக ஒத்திவைக்கப்பட்டது.
பாலம் மிகவும் பழுதடைந்துள்ள காரணத்தினாலும், நீண்ட காலத்திற்கு பாலத்தினை பயன்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையிலும், இனியும் சீரமைப்பு பணிகள் காலதாமதப்படுத்த முடியாது என்பதால், பொதுமக்களின் நலன் கருதி, காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து வாகனப் போக்குவரத்துகளையும் நிறுத்தி பாலம் பழுதுபார்க்கும் பணி தொடங்கப்படுகிறது.
இதனால் வேலூரிலிருந்து சித்தூர் செல்லும் அனைத்து வாகனங்களும் வேலூர் - பழைய பஸ் நிலையம், வி.ஐ.டி, இ.பி. கூட்டுரோடு, சேர்காடு வழியாக செல்ல வேண்டும்.
சித்தூரிலிருந்து வேலூர் வரும் வாகனங்கள்.இதே வழியை பயன்படுத்தி வரலாம். குடியாத்தத்திலிருந்து வேலூர் வரும் பஸ்கள் காட்பாடி கூட்டுரோடு, கிறிஸ்டியான்பேட்டை, டெல் வரை செல்லலாம். வேலூரிலிருந்து அரக்கோணம் செல்லும் வாகனங்கள் வேலூர் பழைய பஸ் நிலையம், வி.ஐ.டி, இ.பி.கூட்டுரோடு, சேர்க்காடு, வள்ளிமலை, சோளிங்கர், திருத்தனி செல்ல வேண்டும்.
கிரிஸ்டியா–ன்பேட்டையிலிருந்து சித்தூர் பஸ் நிலையம் வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, ரிக்ஷா, இலகுரக வாகனங்கள் (கார்). வள்ளிமலை கூட்டுரோடு, காமராஜபுரம், ரெயில்வே நுழைவுப் பாலம், பழைய காட்பாடி வழியாக சித்தூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
கிறிஸ்டியான்பேட்டை, கரசமங்கலம், லத்தேரியிலிருந்து வேலூர் செல்லும் கார், இலகுரக சரக்குவாகனங்கள் ஜாப்ராபேட்டை, கழிஞ்சூர், விருதம்பட்டு வழியாக செல்லலாம்.
தென் மாவட்டங்–களிலிருந்து திருவண்ணாமலை வழியாக வரும் சரக்கு வாகனங்கள் போளூர், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை சேர்காடு வழியாக சித்துார் செல்ல வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகவரும் சரக்குவாகனங்கள் பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாக சித்தூர் செல்ல வேண்டும். சித்தூரிலிருந்து தமிழ்தாடு வரும் வாகனங்கள் வேலூர் மாவட்ட அனுமதி பெற்ற சரக்கு வாகனங்கள் மட்டும் சேர்காடு வழியாக, இ.பி. கூட்டுரோடு. வி.ஐ.டி. வழியாக செல்லவும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் சேர்காடு, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை வழியாக செல்ல வேண்டும்.
சித்தூரிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலத்தின் சீரமைப்பு பணியின் காரணமாக ஏற்பட்டுள்ள அசவுகரியத்தை ஒருமாத காலத்திற்கு பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.