உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாவட்டத்தில் 77 மையங்களில் குரூப்- 2 தேர்வு எழுத ஏற்பாடு

Published On 2022-05-17 15:25 IST   |   Update On 2022-05-17 15:25:00 IST
வேலூர் மாவட்டத்தில் 77 மையங்களில் குரூப்- 2 தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில், குருப் 2 நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான முதல்நிலைத்தேர்வு வருகிற 21-ந் தேதி (முற்பகல் மட்டும்) அன்று நடைபெற உள்ளது.

வேலூர் மற்றும் குடியாத்தம் இரு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வேலூர் மையத்தில் 59 தேர்வு கூடங்களும் குடியாத்தம் மையத்தில் 18 தேர்வு கூடங்களும் தேர்வு செய்யப்பட்டு தேர்வு நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டம் முழுவதுமாக இரு மையங்களில் 77 தேர்வு கூடங்களில் இத்தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மையத்தில் 15612 விண்ணப்பதாரர்களும், குடியாத்தம் மையத்தில் 5246 விண்ணப்பதாரர்களும் ஆக மொத்தம் 20,858 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

இது தவிர, ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் பாதுகாப்பிற்கு ஒரு காவலரும், விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்கு பைகள், புத்தகங்கள் மற்றும் கைபேசி, கால்குலேட்டர், பேஜர், போன்ற மின்னணு சாதனங்களை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது. 

கொரோனா காலமாக இருப்பதால் கொரோனா விதிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும், முகக்கவசம் அணியுமாறும், சிறிய அளவிலான கை சுத்தம் செய்யும் திரவத்தினை எடுத்து செல்லுமாறும் தெரிவிக்கப்படுகிறது. 

தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வுக் கூடங்களிலும் விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இன்றி தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

Similar News