உள்ளூர் செய்திகள்
யானைகள்

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானை- வாகன ஓட்டிகள் அச்சம்

Published On 2022-05-17 13:33 IST   |   Update On 2022-05-17 13:33:00 IST
ஆசனூர் வனப்பகுதியில் காட்டு யானை வாகனங்களை வழிமறித்து சாலையில் நடந்து செல்வதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தினர்.
ஈரோடு:

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வபோது தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதும், சாலையை கடந்து செல்வதும் வழக்கம். இன்னும் சில நேரங்களில் வாகனங்களை வழிமறிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது. காட்டு யானை வாகனங்களை வழிமறித்து சாலையில் நடந்து செல்வதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தினர்.

எதைப்பற்றியும் கவலைப்படாத காட்டுயானை சிறிது நேரம் சாலையில் உலா வந்தது. பின்னர் வனப்பகுதிக்குள் மீண்டும் சென்று விட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலையில் காட்டு யானை நடமாடுவதை கண்டால் வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை ஒலிக்க வேண்டாம் எனவும், செல்போன்களில் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News