உள்ளூர் செய்திகள்
இந்து முன்னணியினர் முற்றுகையில் ஈடுபட்ட காட்சி

கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற விவகாரம்- இந்து முன்னணியினர் போராட்டம்

Published On 2022-05-16 15:36 IST   |   Update On 2022-05-16 15:36:00 IST
செல்லியம்மன் கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றதை கண்டித்தும், இதை தடுக்காத அமைச்சர் துரைமுருகன், சேகர்பாபுவை கண்டித்தும் இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பினர்.
வேலூர்:

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறையின் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.

இதில் சிலர் செருப்பு அணிந்து கோவிலுக்குள் வந்ததாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த காட்சி பரவியது.

இந்த நிலையில் செல்லியம்மன் கோவில் முன்பு இன்று காலை இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் பா.ஜ.க. மாவட்டத் தலைவர் மனோகரன் மற்றும் இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றதை கண்டித்தும், இதை தடுக்காத அமைச்சர் துரைமுருகன், சேகர்பாபுவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

கோவிலில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும், செல்லியம்மன் கோவில் செயல் அலுவலரை பதவி நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு கோவில் செயல் அலுவலரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது செயல் அலுவலர் இல்லாததால் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தது. இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News