உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு பேசிய காட்சி.

மாநில அரசின் திட்டங்களுக்கு வேகத்தடை ஏற்படுத்த கூடியவராக கவர்னர் இருக்கக்கூடாது - சேகர்பாபு பேச்சு

Published On 2022-05-16 09:47 GMT   |   Update On 2022-05-16 09:47 GMT
மாநில அரசின் திட்டங்களுக்கு வேகத்தடை ஏற்படுத்த கூடியவராக கவர்னர் இருக்கக்கூடாது என காட்பாடி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசினார்.
வேலூர்:

காட்பாடி தொகுதி தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு நடந்தது. 

காட்பாடி பகுதி செயலாளர் ஜி. வன்னியராஜா தலைமை தாங்கினார். காட்பாடி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.சரவணன், எஸ். தணிகாசலம், எஸ். ராஜேந்திரன், சி.ரவி வாலாஜா ஒன்றிய செயலாளர் ஏ.கே.முருகன், பகுதி செயலாளர்கள் என். பரமசிவம், பி. முருகப்பெருமாள், காட்பாடி ஒன்றியக்கழு தலைவர் வி.வேல்முருகன், மாநகர துணை செயலாளர் கோவிந்தன், மண்டல குழு தலைவர் வி.புஷ்பலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி துணைமேயர் எம்.சுனில் குமார் வரவேற்று பேசினார்.

அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் உழைப்பால் ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது. பதவியேற்பு விழா எளிமையாக நடந்தது. ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது கொரோனா தொற்று பேரலை அதிகமாக இருந்தது. மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை என மக்கள் அவதிப்பட்டனர்.

இதில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தானே களத்தில் இறங்கி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் களத்தில் இறக்கி தமிழகத்தை சகஜ நிலைக்கு கொண்டுவந்தார்.

அது முடிந்ததும் பெருமழை வெள்ளம் ஏற்பட்டது . மழை நீரில் முதலமைச்சர் நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்டார். 45 நாட்கள் இயற்கையுடன் போராடி வென்ற தலைவர் மு.க. ஸ்டாலின்.

இந்தி மொழியை நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் இந்தி திணிப்பு நடைபெறும்போது உறுதியாக எதிர்ப்போம். சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினால் அவர் அதை மத்திய அரசுக்கு அனுப்ப தயங்குகிறார். அதனால்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தார். நல்ல திட்டங்களுக்கு கவர்னர் வேகத்தடை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., சட்டமன்ற கொறடா கோவி. செழியன், வேலூர் மத்திய மாவட்ட  செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., டி. எம்.கதிர்ஆனந்த் எம்.பி. மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி, மாநகராட்சி மேயர் ஏ.சுஜாதா, மாவட்ட பொருளாளர் சி.நரசிம்மன், வள்ளலார் தொண்டு நிறுவனத் தலைவர் ஆர்.பி. ரமேஷ் ஆகியோர் உள்பட நிர்வாகிகள் பலர்கலந்து கெண்டனர்.
Tags:    

Similar News