உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தகவல்
புதுவையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சமூகநலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் சமூகநலத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த சமூகநலத்துறை சத்யா சிறப்பு பள்ளி மூலம் புதுவை மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்த உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 1995-ன்படி 7 வகையான பிரிவு மட்டுமே இருந்தது. தற்போது சட்டம் 2016-ன்படி 21 வகையான மாற்றுத்திற னாளிகள் வகைப்படுத்த ப்பட்டுள்ளனர்.
புதியவகை குறை பாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் பொருட்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் மூலம் தனித்துவ மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவையில் 18 ஆயிரத்து 849 பேர் இந்த அட்டை பெற்றுள்ளனர். சமூகநலத்துறையில் மாத உதவித்தொகை பெறுவோர் விபரங்கள் மட்டுமே உள்ளன. எனவே எஞ்சிய மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தனித்துவ அடையாள அட்டை வழங்க மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் சத்யா சிறப்பு பள்ளி பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த கணக்கெடுப்பினால் 100 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் பற்றி முழு விபரம் அரசுக்கு கிடைக்கும்.
அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கும் மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டை வழங்குவது உறுதி செய்யப்புடும். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மேலும் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.