உள்ளூர் செய்திகள்
பழனியில் ஒட்டப்பட்டுள்ள நினைவு அஞ்சலி போஸ்டர்.

பழனியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் பரபரப்பு வாசகங்கள்

Published On 2022-05-16 05:54 GMT   |   Update On 2022-05-16 05:54 GMT
பழனியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இடம்பெற்ற வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது
பழனியை அடுத்த அமரபூண்டி கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்டையன் என்ற சங்கர் என்பவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான். கொலை செய்யப்பட்ட சங்கர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பழனி காவல் நிலையங்களில் உள்ளன.

சங்கர் கொலை வழக்கில் தொடர்புடைய பழனி அடிவாரம் பகுதியைச் சார்ந்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்களில் சிலர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்த நிலையில் கொலை சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் சங்கரின் ஆதரவாளர்கள் மலைஅடிவாரத்தில் பல இடங்களில் சங்கருக்கு நினைவு அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அதில் சங்கர் சூழ்ச்சியால் வீழ்த்த பட்டதாகவும், கொலை செய்தவர்கள் யாரும் வாழ மாட்டார்கள் என்று சங்கர் கொலையாளிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே அடிவாரம் பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்தவர்களில் சங்கர் இடம் பெற்றிருந்ததால் பழிக்குப்பழியாக சங்கர் மற்றும் கூட்டாளிகள் ஓடஓடவெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக மீண்டும்  அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய போஸ்டரை சங்கரின் கூட்டாளிகள் பொது இடங்களில்  ஒட்டியுள்ளதால் பழனி அடிவாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டிய நபர் யார் என கண்டறிய எஸ்.பி. சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் மலையடிவார பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து அடிவாரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனியில் கடந்த சில மாதங்களாக பழிக்குப் பழியாக நடந்த கொலைச் சம்பவங்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News