உள்ளூர் செய்திகள்
வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க தீவிரம்
வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வேலூர் :
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி, மாடல் சிட்டி ஆகிய திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளை முன்னேற்றம் செய்வது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இத்திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது
வேலூர் மாநகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 937 இடங்களில் சாலைப்பணிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 280 பணிகள் முடிவடைந்துள்ளது.
டிசம்பர் மாதத்துக்குள் மீதம் உள்ள சுமார் 500 இடங்களில் சாலை பணிகளை விரைந்து முடிக்க ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்ததாரர், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி சாலை பணிகள் அமைய உள்ள இடங்களில் உடைந்த குழாய்களை சீரமைத்தல், வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்ட குழாய்களில் உள்ள பழுதை நீக்குதல் போன்ற பணிகள் முடிக்க வேண்டும். அதன் பின்னர் சாலை பணிகள் நடைபெறும்.
இந்த பணிகள் 90 நாட்களுக்குள் முடிக்க காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெறாமல் உள்ள இடங்களில் பணிகள் தொடங்கப்படும்.
மாநகராட்சியில் அனைத்து பாதாள சாக்கடை பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.