உள்ளூர் செய்திகள்
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை சிறப்பு அதிகாரி ஆய்வு
வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை சிறப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர்,
தமிழகத்தில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக அரசு சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறது.
அதன்படி வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது பஸ் வெளியே செல்லும் நுழைவு பகுதி குறுகலாக இருந்ததை பார்த்தார். அந்த வழியாக ஒரு பஸ் செல்லும் வகையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே 2 பஸ் செல்லும் வகையில் அந்த பாதையை அகலப்படுத்த வேண்டும் என்று அவர் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
முக்கிய பணிகள் இதையடுத்து சர்க்கார்தோப்பில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின்சக்தி உற்பத்தி மையம் போன்றவற்றை அவர் பார்வையிட்டார்.
மேலும், மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய பணிகள் குறித்து வரைபடம் மூலம் அவருக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.