உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மல்சிங் சீட் தொழில்நுட்பத்தில் பப்பாளி சாகுபடி

Published On 2022-05-14 10:54 GMT   |   Update On 2022-05-14 10:54 GMT
காய்களில் இருந்து பால் எடுத்து விற்பனை செய்யும் குறிப்பிட்ட சில ரகங்கள் உள்ளது. பப்பாளி பாலிலிருந்து பெறப்படும் “பப்பெயின்” அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
உடுமலை:

உடுமலை பகுதியில் கிணற்று பாசனத்திற்கு காய்கறி சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் அதற்கேற்ப சாகுபடியை  விவசாயிகள் தேர்வு செய்கின்றனர். அதன்படி பரவலாக விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர். இதில் பழங்கள் தேவைக்காக அதிக அளவு சாகுபடி செய்கின்றனர்.

காய்களில் இருந்து பால் எடுத்து விற்பனை செய்யும் குறிப்பிட்ட சில ரகங்கள் உள்ளது. பப்பாளி பாலிலிருந்து பெறப்படும் "பப்பெயின்" அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

பப்பாளி பால் உற்பத்திக்காக பிரத்தியேக ரக நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது பப்பாளி சாகுபடியில் நீர் சிக்கனத்தை பின்பற்ற மல்சிங் சீட் தொழில்நுட்பத்தை உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர். மேட்டுப்பாத்தி அமைத்து அதன் மேல் பரப்பி விடப்படுகிறது. அதில் நாற்று நடவுக்கு தேவையான இடைவெளி விடப்பட்டு இருக்கும்.

அவ்விடத்தில் சொட்டுநீர் வாயிலாக தண்ணீர் பாய்ச்சலாம். கோடை காலத்தில் பப்பாளி நாற்றுகளில் அதிக ஈரப்பதம் தொடர்ச்சியாக இருக்கும். குறைந்த தண்ணீரை கொண்டு பப்பாளி சாகுபடி மேற்கொள்ளலாம். ஆனால் விற்பனை வாய்ப்புகள் குறித்து போதிய அனுபவம் இல்லாதது முக்கிய பிரச்சினையாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் கோடை காலத்தில் பெய்த மழையினால் கிடைத்த ஈரப்பதத்தை பயன்படுத்தி விவசாயிகள் விளைநிலங்களை கோடை உழவு செய்து உள்ளனர். மழை தொடர்ந்தால் மானாவாரியாக தானிய விதைப்பு செய்ய விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.  
Tags:    

Similar News