உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவை நகரில் கஞ்சாவை பதுக்கி விற்ற 53 பேர் கைது

Published On 2022-05-12 10:37 GMT   |   Update On 2022-05-12 10:37 GMT
கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை:

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு  டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனையடுத்து கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சாவை பதுக்கி வைத்து  விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாநகர  போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை மாந ரில் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி வரை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

இதில் 45 இடங்களில் கஞ்சா விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 53 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் களிடம் இருந்து 51 கிலோ 345 கிராம் கஞ்சா மற்றும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள் பலர் உள்ளனர். ஆந்திராவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வரும் மர்மநபர்கள், அங்கு இருந்து இருசக்கர வாகனங்களில் கோவைக்கு கஞ்சாவை கடத்தி வருகிறார்கள். 

பின்னர் அவர்கள் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. மாநகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.  குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாட்ஸ்-ஆப்பில் குழு அமைத்து கஞ்சா விற்பனை நடப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே, பொதுமக்கள் கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார். 
Tags:    

Similar News