உள்ளூர் செய்திகள்
வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நெடுஞ்சாலைகளில் ஓடும் வாகனங்கள் கணக்கெடுப்பு
வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நெடுஞ்சாலைகளில் ஓடும் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டது.
வேலூர்:
நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் சாலைகளை மேம்படுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகளை பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் எண்ணிக்கை செய்யப்படுகிறது. அதற்கேற்ப சாலைகள் மேம்பாலங்கள் மேம்படுத்தி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்த பணிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகள், பாலங்கள் மற்றும் சந்திப்புகளில் வாகனங்களை எண்ணும் பணியில் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கும் என்பதால், முக்கிய வழித்தடங்கள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து ஓட்டத்தை மதிப்பிடுவதற்கு இதுபோன்ற ஆய்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்பட வேண்டும்.
சுழற்சி முறையில் தொழிலாளர்கள் மூலம் எண்ணும் பணி 24 மணி நேரமும் நடக்கிறது. இது போன்ற நடவடிக்கை போக்குவரத்து போலீசார், வேலூர் நகரின் முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் செல்வதை சீராக்க உதவுகிறது.
வேலூர் நெடுஞ்சாலைத் துறையால் பணியமர்த்தப்பட்ட இளம் பணியாளர்கள் சாலைகளில் ஓடும் வாகனங்கள் கணக்கெடுத்து வருகின்றனர். கார்கள், பஸ்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ வகைகளை சாலையோரங்களில் குழுவாக அமர்ந்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் மட்டும், 1,060 கிலோமீட்டர் துாரம் கொண்ட, 140-க்கும் மேற்பட்ட சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் குழுக்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த மாவட்டங்களில் 450 சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் மேம்படுத்துவது பாலங்கள் உறுதித்தன்மை ஆய்வு செய்து புதிய பாலங்கள் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.