உள்ளூர் செய்திகள்
சாலையை விரைவாக சீரமைக்க வலியுறுத்தி கல்லப்பாடி கிராமத்தில் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்.

குடியாத்தம்-சித்தூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்

Published On 2022-05-12 15:17 IST   |   Update On 2022-05-12 15:17:00 IST
குடியாத்தம்-சித்தூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:

குடியாத்தம்-சித்தூர் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை.  இந்த சாலை வழியாக தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்குச் எப்போதும் கனரக வாகனங்கள் அதிக அளவு சென்று வருகிறது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தத்தில் இருந்து பரதராமி வரை சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு பகுதிகளாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. அதில் பெரும்பாலான சாலை பணி முடிவடைந்து விட்டது ஆனால் கல்லப்பாடி பகுதியில் உள்ள சாலை இன்னும் அமைக்காமல் உள்ளது. 

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் விரைவாக சாலை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.கடந்த வாரம் பரதராமி பகுதியில் ஆய்வுக்கு வந்த கலெக்டரும் சாலையை சீரமைக்காமல் 

இருப்பதைப் பார்த்து உடனடியாக நெடுஞ்சாலைத் துறை யினருக்கு விரைவாக சாலையை சீரமைக்குமாறு உத்தரவிட்டார்.  இருப்பினும் சாலை அமைக்கும் பணி மிகவும் தாமதமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

கல்லப்பாடியில் கெங்கையம்மன் திருவிழா வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக கல்லப்பாடி பகுதியில் உள்ள சாலையை சீர் செய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தினர் . அப்போது அதிகாரிகள் விரைவாக சாலையை சீர் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.

இருப்பினும் கல்லப்பாடி பகுதியில் சாலை சீரமைக்காததால் நேற்று அந்த ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கல்லப்பாடி பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் குடியாத்தத்தில் இருந்து கல்லப்பாடி பரதராமி வழியாகச் செல்லும் வாகனங்களும், ஆந்திராவிலிருந்து குடியாத்தம் வழியாகச் செல்லும் வாகனங்களும் வழிநெடுகிலும் நின்றன இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் லலிதா, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் சம்பத்குமார் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

விரைவாக சாலையை சீரமைக்க உறுதியளித்தனர் இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஒரு மணி நேரம் இதனால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

Similar News