உள்ளூர் செய்திகள்
தமிழக கவர்னர் ஆர்என் ரவி - முதலமைச்சர் முக ஸ்டாலின்

ஒரே நாளில் ஊட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கவர்னர் ரவி முகாம்

Published On 2022-05-12 09:42 GMT   |   Update On 2022-05-12 09:42 GMT
துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் ஆகியோர் ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வருவதை அடுத்து மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலைத்துறையும் இணைந்து செய்து வருகின்றன.

இதுதவிர ஊட்டி உதயமாகி 200 ஆண்டு தினமும் கொண்டாடப்பட உள்ளது . இதன் ஒரு பகுதியாக நினைவு சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது. அரசு சார்பிலும், 200 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19ந் தேதி மாலை ஊட்டி செல்கிறார். 20ந் தேதி காலை ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து மலர் செடிகளை பார்வையிடுகிறார்.

அதன்பின்னர் ஊட்டி உதயமாகி 200 ஆண்டு தினத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கும் முதலமைச்சர் 21ந் தேதி அரசு சார்பில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இதேபோன்று வருகிற 15ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். வருகிற 24ந் தேதி வரை ஊட்டியில் தங்கும் கவர்னர் அன்றைய தினம் நடக்கும் மலர் கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.

முதலமைச்சரும், கவர்னரும் ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வந்தாலும் ஒன்றாக சந்தித்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

இதனிடையே 15ந் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் குன்னூர் மற்றும் ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு வருகை தர உள்ளார்.

துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் ஆகியோர் ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வருவதை அடுத்து மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



Tags:    

Similar News