உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள்

Published On 2022-05-11 16:14 IST   |   Update On 2022-05-11 16:14:00 IST
திருமூர்த்தி அணை படகுத்துறை எதிரில் அரசு சார்பில் கடந்த 1984ம் ஆண்டு 120 வீடுகள் கட்டித்தரப்பட்டன.
உடுமலை:

உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் கடந்த 1972ம் ஆண்டு, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருமூர்த்திமலைக்கு இடம் பெயர்ந்தனர். திருமூர்த்தி அணை படகுத்துறை எதிரில் அரசு சார்பில் கடந்த 1984ம் ஆண்டு 120 வீடுகள் கட்டித்தரப்பட்டன.

இந்த குடியிருப்பில் பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் போது, சுத்திகரிக்கப்படாத குடிநீரை பயன்படுத்துவதால், அடிக்கடி அப்பகுதி மக்கள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இதே போல் 120 வீடுகள் கொண்ட குடியிருப்பில் போதிய அளவு பொதுக்கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி தரப்படவில்லை.

குடியிருப்பின் பின்பகுதி வனமாக உள்ளதால், இரவு நேரங்களில், விலங்குகள் அங்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இதைத்தவிர்க்க கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையும், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளின் முன் கழிவு நீர் தேங்கியுள்ளது.

மேலும் அரசால் கட்டித்தரப்பட்ட வீடுகளின் மேற்கூரை சிதிலமடைந்து மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த வீடுகளை கணக்கெடுத்து பராமரிப்பு நிதி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News