உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

அறிவிக்கப்படாத மின் தடையால் மாணவர்கள் அவதி

Published On 2022-05-11 16:01 IST   |   Update On 2022-05-11 16:01:00 IST
பெரம்பலூர் மாவட்ட கிராமப்பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடையால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
பெரம்பலூர்:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இருவாரங்களாக தினமும் நள்ளிரவில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது தேர்வெழுதும் எஸ்.எஸ்.எல.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 20 நாட்களாக தினமும் 100 டிகிரி செல்சியஸ் பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக கடந்த மே 1-ந்தேதி 107, மே 2-ந்தேதி 106 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக பெரம்பலூர் டவுன், பாளையம், அம்மா பாளையம், குரும்பபாளையம், மங்கூன், ஈச்சம்பட்டி, வாலிகண்டபுரம் பகுதிகளில் நள்ளிரவில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.

பாளையம் பகுதியை சேர்ந்த கந்தன் என்பவர் கூறும்போது, எங்கள் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 11.55 மின்தடை ஏற்பட்டது. பின்னர் நேற்று காலை 8 மணிக்குதான் மின்சாரம் வந்தது. எனது மகள் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதி கொண்டிருக்கிறார். இந்த மின்வெட்டு மகளை பெரிதும் பாதித்துள்ளது.

இப்போது இருக்கும் புழுக்கத்தில் மின்விசிறியோ  ஏசியோ இல்லாமல் இருக்க முடியாது. இதற்கு உடனே தீர்வு காணாவிட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்றார்.
அம்மாபாளையத்தை சேர்ந்த இன்னொருவர் கூறும்போது, எங்கள் ஊரில் இருவார காலமாக தினசரி 3 மணிநேரம்மின்வெட்டு ஏற்படுகிறது.  பெரும்பாலும் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதனால்  மின்வெட்டு வீட்டு உபயோக  பொருட்கள் பாழாகிறது.

பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் வீட்டிற்கு வெளியே சென்று தூங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. குறைந்த மின்அழுத்தம் காரணமாக எலெக்ட்ரானிக் பொருட்களை இயக்க முடியவில்லை என்றார்.

இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, கடந்த திங்கட்க்கிழமை பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த காற்று வீசியது. இதில் மின்கம்பங்கள் சேதடைந்துள்ளன. ஆகவே இதனை சீர்செய்ய மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டது. ஆனால் மற்ற நாட்களில் மின்சார வினியோகத்தை நிறுத்தவில்லை என்றனர்.

Similar News