உள்ளூர் செய்திகள்
வேலூர் கோட்டை அகழியை சுற்றிலும் ராட்சத விளக்குகள் பொருத்தம்
வேலூர் கோட்டை அகழியை சுற்றிலும் 94 இடங்களில் ராட்சத விளக்குகள் பொருத்தப்படுகிறது.
வேலூர்:
வேலூர் கோட்டை 113 ஏக்கர் பரப்பளவில் அகண்டு விரிந்து பல்வேறு வரலாற்றுச் சின்னங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கோட்டையை பார்வையிட வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன் வேலுார் கலெக்டராக இருந்த அஜய் யாதவ் கோட்டையை சுற்றிலும் விஜயநகர பேரரசு காலத்தை விளக்கும் வகையில் கோட்டை கொத்தளங்களில் அந்தகால சிப்பாய்கள் காவல் காப்பது போன்ற பொம்மைகளை நிறுவி, அதை நோக்கி கோட்டை அகழி கரையில் ஸ்பாட் லைட்டுகளை வைத்தார்.
இதனால் கோட்டை இரவு நேரத்தில் ஜொலித்தது. இதற்காக காற்றிலிருந்து மின்சாரம் எடுக்க தனி ஏற்பாடுகளும் அமைக்கப்பட்டது. அப்போது இதுபரபரப்பாக பேசப்பட்டது.
கோட்டையும் வண்ண விளக்குகளால் இரவு நேரத்தில் ஜொலித்தது. பலருடைய பாராட்டையும் பெற்றது. பின்னர் வழக்கம் போல பராமரிப்பு மறைந்து போனதால் அன்று வைக்கப்பட்ட பொம்மைகள் காற்று, மழையில் சிதைந்து போனது.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூரை அழகாக்கும் பணிகள் தொடங்கியது. அதில் வேலூர் கோட்டையின் உட்பகுதியில் மார்பிள் நடைபாதைகள், அந்த காலத்து விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால், கோட்டை உட்பகுதிகள் அழகு பெற்றது.
அதேபோன்று ஆங்கிலேயேர்களால் பயன்படுத்தப்பட்ட கட்டடங்கள் ஆட்கள் இல்லாமல் சிதைந்து போய் கிடக்கிறது. இதையும் மராமத்து பார்க்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருக்கிறார். அந்த பணிகளும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கோட்டையின் வெளிப்புற அழகை மக்கள் எளிதாக இரவிலும் கண்டுகளிக்க வசதியாக கோட்டையை சுற்றியும் அகழிக்கரைகளில் இருந்து ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகள் இப்போது தொடங்கியிருக்கிறது.
இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அகழிக்கரைகளில் கோட்டையை சுற்றிலும் 94 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தூண்கள் அமைத்து அதிகளவு ஒளி தரும் எல்இடி விளக்குகள் அமைக்கப்படுகிறது.
இதனால், இரவு நேரத்திலும் கோட்டையை அழகாக கண்டுகளிக்கலாம். இப்பணிகள் ஓரிரு மாதங்களில் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.