உள்ளூர் செய்திகள்
காங்கேய நல்லூரில் உள்ள தெருவில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ள காட்சி.

காங்கேயநல்லூரில் ஜல்லிக்கற்கள் கொட்டி ஒரு மாதமாகியும் சாலை போடவில்லை

Published On 2022-05-10 14:56 IST   |   Update On 2022-05-10 14:56:00 IST
காங்கேயநல்லூரில் ஜல்லிக்கற்கள் கொட்டி ஒரு மாதமாகியும் சாலை போடாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
வேலூர்:

காட்பாடி காங்கேயநல்லூர் 10-வது வார்டு விநாயகர் கோவில் தெருவில் சாலை அமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனிடையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

அப்போது தெருவை சமன்செய்து ஜல்லி கற்களை கொட்டினர். உடனடியாக சாலை வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் அவர்கள் எண்ணத்திற்கு எதிராக தெருவில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட நிலையில் அப்படியே பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இதனால் வாகனங்கள் பொதுமக்கள் தெருவில் நடமாட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. அந்த தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் தறி நெசவு தொழில் செய்து வருகின்றனர்.இவர்கள் வாகனங்களில் செல்ல முடியவில்லை.

ஜல்லி கொட்டாமல் இருந்தபோதே தெருவில் ஓரளவு நடமாட முடிந்தது. ஆனால் இப்போது சாலை அமைக்கும் பணியை தொடங்கி விட்டு கிடப்பில் போட்டுள்ளனர்.

காங்கேயநல்லூரில் இதே போல மேலும் சில தெருக்களில் ஜல்லி கொட்டப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாலைகள் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் குழந்தைகள் பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. உடனடியாக தெருக்களில் சாலை அமைக்க வேண்டும் அல்லது கொட்டப்பட்ட ஜல்லி கற்களை தயவுசெய்து அப்புறப்படுத்தி விடுங்கள் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Similar News