உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் பேட்டி அளித்த காட்சி.

கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை

Published On 2022-05-08 15:07 IST   |   Update On 2022-05-08 15:07:00 IST
அறந்தாங்கி அருகே தொழிலதிபரை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிருஷ்ணாஜிபட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் பேசிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா, கொரொனா நெருக்கடிகள் நீங்கிய பிறகு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும் என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. அண்டை நாடான இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் பொருளாதார நெருக்கடியை ஒன்றிய அரசு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறுபான்மை மக்களை வஞ்சித்து ஒரு அரசை நடத்திட இயலாது. எனவே ஒன்றிய அரசு 3 சட்டங்களை மீண்டும் செயல்படுத்த நினைத்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்.

அறந்தாங்கி அருகே ஆவுடையார்பட்டினத்தில் நிஜாம் என்ற தொழிலதிபரை கொலை செய்து 170 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் நடைபெற்று 10 நாட்களை கடந்தும் இதுவரை காவல்த்துறையினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

நகரின் முக்கிய பகுதியில் வீட்டில் இருந்தவர் கொலை செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே டி.ஜி.பி. உடனடியாக நேரில் பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் செய்யதுஅகமது, மாவட்ட பொதுச் செயலாளர் அரபாத், மாவட்ட துணைத் தலைவர் குலாம்முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News