உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் ரத வீதிகளில் அதிகாரிகள் ஆய்வு
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவையோட்டி ரத வீதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனார்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் தேர் திருவிழா வரும் 11-ந்தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
சிரசு திருவிழா குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு 14-ந்தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த இரண்டு தேர்கள் செல்லும் பாதைகளை ஆய்வு செய்யுமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல்பாண்டியன் அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் தாசில்தார் லலிதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் மற்றும் கெங்கையம்மன் கோவில் தேர் செல்லும் பாதைகளை நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
மின் ஒயர்கள்அந்த ஆய்வின் போது சாலையில் ஆங்காங்கே சிறுசிறு பழுதான இடங்களை உடனடியாக சீர் செய்யவேண்டும், தேர் செல்லும் பாதைகளில் உள்ள மரங்களின் கிளைகளை தேவையான அளவு வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
சாலையின் குறுக்கே செல்லும் மின் ஒயர்கள் குறித்தும் தேர் செல்லும் சமயத்தில் அப்புறப்படுத்தவேண்டும், தேர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உதவி கலெக்டர் தனஞ்செயன் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் ஆலய தேர் திருவிழா கமிட்டி நிர்வாகிகள் உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.