உள்ளூர் செய்திகள்
மழை

புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

Update: 2022-05-07 10:37 GMT
சேத்தியாத்தோப்பு, எறும்பூர், வளைய மாதேவி, பின்னலூர், வீரமுடையாநத்தம், ஆனைவாரி, குமாரகுடி, சாத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இடியுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
புவனகிரி:

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து நெற்பயிர் சாகுபடி செய்து அறுவடை முடிந்துள்ளது.

தற்போது விளைநிலங்களில் விவசாயிகள் உளுந்து மற்றும் எள் சாகுபடி செய்துள்ளனர். புவனகிரி மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் தற்போது உளுந்து அறுவடை முடிந்துள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. எனவே மக்கள் கோடை வெயில் கோரதாண்டவத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்ததால் எப்போது மழை பெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அதன்படி அக்னி நடத்திரம் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதைபோல புவனகிரி, தம்பிக்கு நள்ளான் பட்டினம், தெற்கு திட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்தது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது புவனகிரி பகுதியில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு ஒருசில குறுவை நாற்று நட்டுள்ளனர். இந்த கோடை மழை எள் மற்றும் குறுவை நாற்றுக்கு உகந்தது. தொடர்ந்து மழை பெய்தால் ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.

இதேபோல சேத்தியாத்தோப்பு, எறும்பூர், வளைய மாதேவி, பின்னலூர், வீரமுடையாநத்தம், ஆனைவாரி, குமாரகுடி, சாத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இடியுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News