உள்ளூர் செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கல்வி நிறுவனங்களில் மத மாற்றத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-05-06 09:11 GMT   |   Update On 2022-05-06 09:11 GMT
கல்வி நிறுவனங்களில் மத மாற்றத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கிற்கு தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கிறிஸ்துவ மிஷனரிக்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறது. அதன் காரணமாக தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

அதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி கன்னியாகுமரி பள்ளியில் மதமாற்ற விவகாரத்தில் மாணவியை முட்டியிட செய்த விவகாரம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

மத ரீதி செயல்பாடுகளுக்காக கல்வி நிறுவனங்களை பயன்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தாலும், கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு ஆதரவான அரசு அமையும்போதெல்லாம் இந்துக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுகிறது.

எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், அதற்கான விதிகளை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், எஸ். ஆனந்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கல்வி நிறுவனங்களில் மதமாற்றத்திற்கு தடைவிதிக்கும் விதமாக விதிகளை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு என்ன சிரமம் உள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், விரிவான விசாரணைக்காக தள்ளிவைத்தனர் .

அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர், தனியார் டி.வி. சேனல் நடத்திய ரகசிய விசாரணையில் தமிழ்நாடு முழுவதும் 5 கல்வி நிறுவனங்களில் மத மாற்றம் நடந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறி கூடுதல் மனுவை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என்று கூறினர். பின்னர் இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News