உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி சாவு
குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை புத்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது22). இவர் கானா பாடல்களை தானே எழுதி செல்போனில் படக்காட்சி மூலம் படமெடுத்து யூடியூபில் பரப்பி வந்துள்ளார்.
மேலும் இவர் ஏற்கனவே 2 கானா ஆல்பம் சாங் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் ரெயில் நிலையம் அருகில் தனது நண்பர்களுடன் கானா ஆல்பம் சாங் எடுக்க சென்று அங்குள்ள தண்டவாள பகுதியில் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக வந்த ஏதோ ஒரு ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக்கண்ட அங்கிருந்த சக நண்பர்கள் அலறியடித்துக் கொண்டு அவரை பிடித்து கத்தி கதறி அழுதனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த மேல்பட்டி ரெயில்வே போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.