உள்ளூர் செய்திகள்
மழை

தென்காசி, தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்றுடன் கோடை மழை- மின்னல் தாக்கி வாலிபர் பலி

Published On 2022-05-04 05:57 GMT   |   Update On 2022-05-04 05:57 GMT
சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் பலத்த காற்று வீசியது.

நெல்லை:

தென்காசி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன.

ஆலங்குளம், பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. திடீரென கனமழை பெய்தது. சுரண்டையில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டியது.

சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் பலத்த காற்று வீசியது.

சங்கரன்கோவில், அய்யாபுரம் பகுதியில் இடிமின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனால் பெரும்பாலான பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் பகுதியில் மாலையில் இடிமின்னல் பயங்கரமாக இருந்தது. அந்த கிராமத்தை சேர்ந்த சந்துரு (வயது23) என்ற வாலிபர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது. இதில் சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்கு மாவட்டம் கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது.

கழுகுமலை அருகே கே.துரைச்சாமிபுரத்தில் பலத்த காற்று வீசியது. இதில் கிராமத்தின் மையப்பகுதியில் காளியம்மன் கோவில் அருகே இருந்த 70 ஆண்டு கால பழமையான ஆலமரம் வேருடன் சாய்ந்து கீழே விழுந்தது.

இந்த மரத்தின் கீழ் பகுதியில் மாலை நேரங்களில் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் விளையாடுவது வழக்கம். ஆனால் நேற்று மழையால் யாரும் அங்கு விளையாட செல்லவில்லை. இதனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

Tags:    

Similar News