உள்ளூர் செய்திகள்
காப்பகத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வேலூரில் காப்பகத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
சோளிங்கர் அரக்கோணம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவரது தந்தை சோளிங்கரில் காப்பகம் நடத்தி வந்தார்.
இதில் 13 வயது மாணவி ஒருவர் தங்கி படித்து வந்தார். அந்த மாணவியை கார்த்திக் ஏமாற்றி பலாத்காரம் செய்தார்.
இதைத்தொடர்ந்து மாணவி காட்பாடியில் உள்ள காப்பகத்தில் வந்து தங்கினார். அங்கு வந்து கார்த்திக் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
காப்பக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
இந்த நிலையில் கார்த்திக் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பட்டது. வேலூர் ஜெயிலில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணத்தை போலீசார் ஒப்படைத்தனர்.
லத்தேரி அருகே உள்ள கரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (26).இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி பலாத்காரம் செய்தார்.
அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்இதுபற்றிய புகாரின்பேரில் லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரனை கைது செய்தனர்.
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட ராஜசேகரன் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
காட்பாடி அருகே உள்ள வடுகந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (21) கணேசன் என்கிற விநாயகம் (24) இவர்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.