உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாக திரையிடப்பட்ட பீட்ஸ்

குடியாத்தம் தியேட்டரில் மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாக திரையிடப்பட்ட பீட்ஸ்

Published On 2022-05-02 15:27 IST   |   Update On 2022-05-02 15:27:00 IST
குடியாத்தம் பகுதி விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் தனியாக விஜய் நடித்த பீட்ஸ் படத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவு செய்தனர்.
குடியாத்தம்:

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டபோது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் வந்தார்.

மாற்றுத்திறனாளிகளான நாங்களும் மனிதர்கள்தானே, நாங்களும் நடிகர்களின் ரசிகர்கள் தானே. ஆனால் எங்களால் திரைப்படங்களை தியேட்டரில் பார்க்க முடியவில்லை என கண்ணீர் மல்க பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதனை கண்ட குடியாத்தம் பகுதி விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் தனியாக விஜய் நடித்த பீட்ஸ் படத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவு செய்தனர்.

இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனமான கிரீன்வே டிரஸ்ட் உடன் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து குடியாத்தம் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தொண்டரணி சார்பில் குடியாத்தம் சக்தி சினிமாவில் நடிகர் விஜய் நடித்த பீட்ஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று காலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

காலையிலே மாற்றுத்திறனாளிகள், நடக்க இயலாதவர்கள் வீல் சக்கர வண்டியில் என 110 பேர் அவர்களின் உதவியாளர்கள் என மொத்தம் 175 பேர் திரையரங்கிற்கு வந்தனர். அவர்களை திரையரங்கத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரையரங்கு ஊழியர்கள் வரவேற்று பத்திரமாக அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.

மேலும் அவர்களுக்கு இடைவேளையின் போது தேவையான தண்ணீர் பாட்டில் பாப்கான் உள்ளிட்டவைகளையும் இலவசமாக வழங்கினர்.

திரைப்படம் முடிந்தபின் மாற்றுத்திறனாளிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். படத்தை பார்த்த அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். சிறு குழந்தைகளாக இருந்த போது பெரியவர்கள் தூக்கிச்சென்று திரைப்படத்தை காண்பித்தனர். அதன்பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையங்கில் வந்து சினிமா பார்த்தது கனவு போல் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Similar News