உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

மருந்துக்கடையில் நடத்தப்பட்ட கருக்கலைப்பில் செவிலியர் பலி- தலைமறைவான உரிமையாளரை பிடிக்க போலீசார் தீவிரம்

Published On 2022-05-01 16:27 IST   |   Update On 2022-05-01 16:27:00 IST
பெரம்பலூர் அருகே மருந்துக்கடையில் நடத்தப்பட்ட கருக்கலைப்பில் செவிலியர் பலியானதையடுத்து தலைமறைவான உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, லெப்பைக்குடிகாடு பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னாசியப்பா கோவில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 33). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெற்றிவேல் கோவையில் தங்கியிருந்து அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

செவிலியராக பணியாற்றிய வேளாங்கண்ணி சு.ஆடுதுறை கிராமத்தில் மெடிக்கல் வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அத்தியூரில், கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (33) வைத்திருக்கும் மருந்தகத்தில் வேளாங்கண்ணி உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கிடப்பதாக தகவல் வந்தது.

இதுபற்றி, அவரின் மூத்த மகளுக்கும், தாய் தனலட்சுமி என்ற கேத்ரினுக்கும் (60)தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது இளையராஜா அவர்களிடம், வேளாங்கண்ணி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்ததாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தால் காப்பாற்றி விடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து வேளாங்கண்ணியை கேத்ரின் மீட்டு, சிகிச்சைக்காக லெப்பைக்குடிகாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து வேளாங்கண்ணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் நேற்று வேளாங்கண்ணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கருக்கலைப்பு செய்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று முதல் கட்ட அறிக்கையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வேளாங்கண்ணியின் தாய் கேத்ரின், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மங்களமேடு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணிக்கும், இளையராஜாவுக்கும் இடையே இருந்த பழக்கம் குறித்தும், வேளாங்கண்ணி கர்ப்பமாக இருந்தது குறித்தும், மூன்றாவது முறையாக கருவுற்ற வேளாங்கண்ணி யாருடைய கருவை சுமந்தார்?

வேளாங்கண்ணியே மெடிக்கல் வைத்து நடத்தி வந்துள்ளார் செவிலியராகவும் பணியாற்றியவர் அவரே கருக்கலைப்பு செய்து கொள்ளலாம், ஏன் அத்தியூர் மெடிக்கலுக்கு சென்று கருக்கலைப்பு செய்தார்?

மேலும் வேளாங்கண்ணி அத்தியூர் மெடிக்கலுக்கு செல்லும் பொழுது சேலை கட்டி சென்று உள்ளதாகவும், மெடிக்கலில் உள்ளாடைகள் இன்றி நைட்டி மட்டும் அணிந்து இருந்ததாகவும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெஞ்சில் கிடந்தது குறித்தும், கருக்கலைப்பு செய்ததில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா அல்லது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதா? அந்த மெடிக்கலில் வேறு யாருக்கெல்லாம் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல மாதங்களாக இளையராஜாவுடன் வேளாங்கண்ணிக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது. அத்துடன் தற்போது தலைமறைவாக உள்ள இளையராஜாவை பிடித்து விசாரித்தால் முழுமையான உண்மை தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Similar News