குமரி வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய 4 பேர் கைது
ஆரல்வாய்மொழி:
பூதப்பாண்டி வன சரகத்திற்குட்பட்ட தெற்கு மலையில் வேட்டை நாய் உதவி உடன் உடும்பு வேட்டையாடி வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவுப்படி பூதப்பாண்டி வனசரக அலுவலர் திலீபன் மற்றும் வனத்துறையினர் தெற்கு மலைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆவரைகுளத்தைச் சேர்ந்த சாத்யகிமிராஸ் (வயது 23), நவீன் ராஜ் (25), அபிமன்யு (24) ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டு பாக்கியஜெரேஸ் (29) ஆகிய 4 பேரும் வேட்டை நாய் உதவியுடன் உடும்பு வேட்டையாடியது தெரிய வந்தது.
இதையடுத்து 4 பேைரயும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 உடும்பும், 2 வேட்டை நாயும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 மோட்டார் சைக்கிள்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட உடும்பு மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களையும் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்டவர்களை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.