உள்ளூர் செய்திகள்
தென்திருப்பேரையில் புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
தென்திருப்பேரையில் சாலை பணிகள் நடைபெற்று வருவதால் அங்கிருந்து புழுதிகள் பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
தென்திருப்பேரை:
நெல்லை- திருச்செந்தூர் மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
மொத்தம் 56 கிலோமீட்டர் நீளமுள்ள ரோடு இந்த சாலையில் விரிவுபடுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் வேகமாக நடந்தது.
இந்த சாலையில் பல இடங்களில் வளைவுகள் அதிகமாக இருந்தது. தற்போது சாலைகள் சீரமைக்கப்படும் போது அந்த வளைவுகளை சரிசெய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் வேகமாக நடைபெற்ற பணி கடந்த சில நாட்களாக மெதுவாக நடப்பதாகவும், குறிப்பிட்ட தூரம் மட்டுமே பணிகள் நடைபெறுவதாகவும், வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
செய்துங்கநல்லூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பணிகள் மந்த கதியில் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் சாலையில் பஸ் மற்றும் வாகனங்கள் செல்லும் போது தூசி பறந்து செல்வதால் எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிரில் வரும் வாகனம் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும் புழுதி படலமாக காட்சி அளிப்பதால் சாலையோரத்தில் உள்ள கடைகளுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.
தற்போது வெயில் காலமாகவும் இருப்பதால் ரோடு புழுதி மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே ரோட்டில் அடிக்கடி தண்ணீர் விட்டு தூசி மற்றும் புழுதி வராமல் ரோடு வேலை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.