உள்ளூர் செய்திகள்
போராட்டம்

பொன்னேரி அருகே பஸ் வராததை கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகள் மறியல்

Published On 2022-04-28 06:13 GMT   |   Update On 2022-04-28 06:13 GMT
கடந்த இரண்டு வாரங்களாக சரிவர குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பொன்னேரி:

பொன்னேரி அருகே உள்ளது ஏலியம்பேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன்னேரியில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு அரசு பஸ்சில் (எண் டி42)சென்று வருவது வழக்கம்.

இந்த பஸ் பொன்னேரி, ஏலியம்பேடு, பெருவாயல், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழியாக ஆரம்பாக்கம் சென்று வருகிறது. காலை, மாலை நேரத்தில் இந்த பஸ்சை நம்பி பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சரிவர குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பஸ் சரிவர இயங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே இன்று காலை ஏலியம்பேடு கிராம பஸ் நிலையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல காத்திருந்தனர். ஆனால் அரசு பஸ் வரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி பெருவாயில் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News