உள்ளூர் செய்திகள்
வேலூரில் பஸ் படிக்கட்டில் தொங்கிய மாணவன் கீழே விழுந்து படுகாயம்
வேலூரில் பஸ் படிக்கட்டில் தொங்கிய மாணவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
வேலூர்:
வேலூர் பாகாயம் முல்லை நகர் 2-வது தெருவைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு பஸ்சில் வந்து செல்கிறார்.
இன்று காலை பாகாயத்திலிருந்து பள்ளிக்கு பஸ்சில் வந்தார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி மாணவன் பயணம் செய்தார்.
விருப்பாட்சிபுரம் அருகே வந்தபோது திடீரென பஸ் டிரைவர் பிரேக் போட்டார். அப்போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த மாணவன் தவறி கீழே விழுந்தார். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.மேலும் தலையில் காயம் ஏற்பட்டது. பயணிகள் மாணவனை மீட்டு முதலுதவி அளித்து அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாநகர பகுதியில் ஓடும் டவுன் பஸ்களில் சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள் ளனர். பொது மக்கள் மற்றும் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
எதையும் கண்டு கொள்ளாமல் சில தனியார் பஸ்களில் டிக்கெட் அதிகளவு ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்கட்டில் தொங்கும் அளவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
இதனால் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் வகையில் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்லும் நபர்கள் மீதும், ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் டிரைவர் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத் தியுள்ளனர்.