உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளையும், காரையும் படத்தில் காணலாம்.

குடியாத்தம் வழியாக காரில் கடத்திய ரூ.50 லட்சம் செம்மரம் பறிமுதல்

Published On 2022-04-26 17:57 IST   |   Update On 2022-04-26 17:57:00 IST
ஆந்திராவிலிருந்து குடியாத்தம் வழியாக காரில் கடத்திய ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதி ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ளது.

சைனகுண்டா சுற்றி வனப் பகுதியாக உள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரம் உள்ளிட்ட மரங்களை இரவு நேரங்களில் வாகனங்களில்  கடத்துவதாக வந்த தொடர் புகாரின் பேரில் வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார்,

 உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் வனவர் முருகன் உள்ளிட்ட வனத்துறையினர் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள கொண்டம்மா கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த சொகுசு காரை வனத்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது காரில் இருந்தவர்கள் இறங்கி அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடினர். 

அந்த வாகனத்தை வனத்துறையினர் தீவிர சோதனை செய்தனர் அதில் சுமார் 4 அடி நீளம் கொண்ட 17 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. சுமார் 500 கிலோ இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ. 50 லட்சம் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து வனத்துறையினர் காரையும், செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.செம்மரக் கட்டைகளை குடியாத்தம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News