உள்ளூர் செய்திகள்
வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து சென்னை இளம்பெண்கள் தப்பி ஓட்டம்
வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து சென்னை இளம்பெண்கள் தப்பி ஓடினர்.
வேலூர்:
வேலூர் பெரிய அல்லாபுரத்தில் அரசினர் பிற்காப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆதரவற்ற மற்றும் குழந்தை திருமணத்தால் பாதிக்கப் பட்ட மைனர் பெண்கள், பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த பிரியா (வயது 19) மேரி (19) ஆகியோர் கடந்த ஆண்டு சென்னை கெல்லீஸ் காப்பகத்தில் இருந்து வேலூர் பிற்காப்பு இல்லத்திற்கு மாற்றப் பட்டனர்.
நேற்று அவர்கள் இருவரும் பிற்காப்பு இல்லத்தில் உள்ள குப்பைகளை வெளியே சென்று கொட்டி வருவதாக கூறிவிட்டு சென்றனர்.
இல்லத்தில் இருந்து வெளியே வந்த அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பிற்காப்பு இல்ல சூப்பிரண்டு சிவகாமி பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரியா, மேரி 2 பேரையும் தேடி வருகிறார். அவர்கள் சென்னைக்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.