உள்ளூர் செய்திகள்
சஸ்பெண்டு

வேலூரில் மணல் கடத்தல் சர்ச்சை- ஆடியோவில் சிக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்டு

Published On 2022-04-26 04:57 GMT   |   Update On 2022-04-26 04:57 GMT
ஆடியோ தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் போலீஸ்காரர் பிரசாந்த்தை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்:

வேலூர் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் டேனியல் என்பவர் அடுக்கம்பாறை பகுதியில் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டுக்கு மணல் தேவைக்காக வேலூர் மாவட்ட எஸ்.பி. தனிப்படையில் பணியாற்றி வந்த காவலர் பிரசாந்த் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

அவரும், தனிப்படையில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மூலம் பஞ்சர் மணி என்பவரை தொடர்புகொண்டு டேனியல் வீட்டுக்கு மணல் கடத்திச்செல்ல பேசியுள்ளனர். மணல் வண்டி யாரிடமும் சிக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முறைகேடாக மணலை கடத்திச் சென்றபோது பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தார்.

இதில் சிக்கிய வாகனத்தை மீட்டுக்கொடுக்குமாறு பஞ்சர் மணி தனிப்படை போலீஸ்காரர் பிரசாந்திடம் பேசும் 4 ஆடியோக்கள் கடந்த மாதம் வெளியானது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த ஆடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், தனிப்படையில் இருந்து பிரசாந்த் விடுவிக்கப்பட்டு ஆயுதப்படைக்கு அனுப்பப்பட்டார். இந்த ஆடியோ தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் போலீஸ்காரர் பிரசாந்த்தை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News