உள்ளூர் செய்திகள்
கைது

வத்தலக்குண்டு அருகே கத்திமுனையில் தொழிலதிபர் கடத்தல்- அரசு காண்டிராக்டர் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் கைது

Published On 2022-04-25 05:32 GMT   |   Update On 2022-04-25 05:32 GMT
மதுரை மாவட்டம் நெற்குன்றத்தில் அன்புச்செழியன் கடத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு விரைந்தனர். அதன்படி அங்கிருந்த அன்புச்செழியனை மீட்டு வத்தலக்குண்டு கொண்டு வந்தனர்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவைச் சேர்ந்தவர் அன்புச்செழியன் (வயது 55). தொழிலதிபரான இவருக்கு வத்தலக்குண்டு - பெரியகுளம் ரோடு புதுப்பட்டியில் நட்சத்திர ஓட்டல் உள்ளது.

இந்த ஓட்டலில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டன. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் இந்த ஓட்டலை வைத்து அன்புச்செழியன் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இதனால் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்நிலையில் நேற்று காலை நடைபயிற்சியில் அன்புச்செழியன் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் அவரை கத்தி முனையில் கடத்திச் சென்றனர்.

அதன் பிறகு அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தனது தந்தையை காணாமல் அவரது மகன் ஜெய்ஆகாஷ் பல இடங்களில் தேடிப்பார்த்தார். அவர் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்ளும் இடத்துக்கு வந்து பார்த்த போது அங்கிருந்தவர்கள் அன்புச் செழியனை ஒரு கும்பல் காரில் கடத்தியது குறித்து தெரிவித்தனர்.

இதனால் தனது தந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. சுகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா, தயாநிதி மற்றும் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

மதுரை மாவட்டம் நெற்குன்றத்தில் அன்புச்செழியன் கடத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு விரைந்தனர். அதன்படி அங்கிருந்த அன்புச்செழியனை மீட்டு வத்தலக்குண்டு கொண்டு வந்தனர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வத்தலக்குண்டு காந்திநகர் ராஜன் தெருவைச் சேர்ந்த அரசு ஒப்பந்தகாரர் வெள்ளைச்சாமி (46) என்பவருக்கு அன்புச்செழியன் பணம் தர வேண்டியுள்ளது. அந்த பணத்தை தர தாமதமானதால் கூலிப்படையை வைத்து அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கூலிப்படை கும்பலைச் சேர்ந்த வத்தலக்குண்டு தெற்குத் தெருவைச் சேர்ந்த சிவா (30), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பரையன்குளத்தைச் சேர்ந்த மணி (41), மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த வடிவேல் (32), விருதுநகர் மாவட்டம் கலைஞர் நகரைச் சேர்ந்த பிரபாகரன் (35), வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த விஜய் (23), மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த பாலமுருகன் (56) உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சினிமா படப்பாணியில் தொழிலதிபரை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் ஒரே நாளில் மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News