உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.55.70 லட்சம் காசோலை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.55.70 லட்சம் காசோலையை அமைச்சர் காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழில் குழுக்களின் வணிக நடவடிக்கையை தொடங்கி வைத்து 41 உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் 5 தொழில் குழுக்கள், 28 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான காசோலையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஜெகத்ரட்சகன் எம்.பி., கூடுதல் திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், திட்ட இயக்குனர்கள் லோகநாயகி, நானில தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழில் குழுக்களின் வணிக நடவடிக்கையை தொடங்கி வைத்து 41 உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் 5 தொழில் குழுக்களுக்கு ஒவ்வொரு குழுக்களுக்கும் தலா ரூ.75 ஆயிரம் வீதம் என ரூ.34.50 லட்சம் மற்றும் மகளிர் திட்டத்துறையின் மூலமாக 28 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி ரூ.21.20 லட்சம் என மொத்தமாக 55 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான காசோலையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மகளிர் குழுக்களுக்கு அதிக அளவில் மானியங்கள் மற்றும் கடன் உதவிகள் வழங்குகிறார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் அனைத்து மகளிர்களும் முன்னேற வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி 1981ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற போது தர்மபுரியில் மகளிர் குழுவினை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகிறது.
அதற்குள்ளாகவே தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளின் ஒன்றான இலவச பேருந்து திட்டத்னை செயல்படுத்தியதன் விளைவாக அனைத்து மகளிர்களும் பயன் அடைந்து வருகின்றனர்.
தற்போதைய ஆட்சியில் அனைத்து மகளிர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.
முன்னதாக வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் குடோன் கட்டும் பணிக்கு அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள், துணைத் தலைவர், நகர மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.