உள்ளூர் செய்திகள்
ராமதாஸ்

இலங்கைக்கு கடல்வழி மின்தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ்

Published On 2022-04-23 07:16 GMT   |   Update On 2022-04-23 07:16 GMT
இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக்கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியிலோ, மின் கோபுரங்கள் அமைத்து கடலுக்கு மேலாகவோ மின் பாதை அமைக்கப்பட்டால், அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டு விடும். இது இந்தியாவுக்கு பாதகமாகவும், இலங்கைக்கு சாதகமாகவும் அமையும். இலங்கைக்கு மட்டுமே பயனளிக்கக்கூடிய மின்பாதை திட்டத்திற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கக்கூடிய சேதுக்கால்வாய் திட்டத்தை எதற்காக இழக்க வேண்டும்? சேதுக்கால்வாய் திட்டம் கைவிடப்படுவதும் இலங்கை அரசுக்குத் தான் லாபமாக அமையும்.

இவை அனைத்தையும் கடந்து இலங்கை போர்க் குற்றங்களை நிகழ்த்திய நாடு, தமிழர்களை இனப்படுகொலை செய்த நாடு, இத்தகைய குற்றங்களுக்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை எதிர்கொண்டு வரும் நாடு என்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்து விடக்கூடாது. இலங்கை கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில், அந்நாட்டுக்கு கருணை அடிப்படையில் உதவிகளை செய்வது வேறு; அந்நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவுவது வேறு என்பதில் இந்தியா தெளிவாக இருக்க வேண்டும். அதேபோல், சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு, கண்களை மூடிக்கொண்டு இலங்கைக்கு உதவுவதும் தவறு ஆகும்.

இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக்கூடாது. பாகிஸ்தானின் பக்கம் இலங்கை சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக கச்சத்தீவை தாரை வார்த்ததன் விளைவை இப்போது வரை தமிழகம் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், சேதுக்கால்வாய் திட்டத்தை தாரை வார்த்து இலங்கைக்கு மின்பாதை அமைப்பதன் பாதிப்பையும் தமிழகம் தான் அனுபவிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு இலங்கை - இந்தியா மின்பாதையை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News