உள்ளூர் செய்திகள்
போச்சம்பள்ளி அருகே ஏரி நிலம் ஆக்கிரமிப்பால் கிராம மக்கள் சாலை மறியல்
போச்சம்பள்ளி அருகேஏரி நிலம் ஆக்கிரமிப்பால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் போக்கம்பட்டி பெரிய ஏரி அமைந்துள்ளது. போக்கம்பட்டி, தரிகாரகொட்டாய், சின்னபாளேதோட்டம், நயினார் கொட்டாய், மூக்கம்பட்டி, ஒட்டுகொள்ளனூர், மொளுகனூர் ஆகிய 7 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக போக்கம்பட்டி பெரிய ஏரி அமைந்துள்ளது.
சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி அமையப் பெற்றிருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர். சிப்காட் தொழிற்சாலைக்கு கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கையகப்படுத்தும் பணியின்போது போக்கம்பட்டி பெரிய ஏரியின் பெரும் பாலான பரப்புகளை ஆக்கிரமித்து கையகப்படுத்தி வருகின்றனர்.
ஏரிக்கு மையப்பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆழ்துளை கிணறு இரண்டு, ராஜவேட்டை முனியப்பன் கோவில் ஆகியவற்றையும் கையகப்படுத்த முயல்கின்றனர்.
இதனை எதிர்த்து கிராம மக்கள் நேற்றுமாலை சிப்காட் செல்லும் சாலையில் போக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஏரிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் தொடர்ந்து போராட்டம் செய்வோம் என கூறினர். அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் போராட்டகாரர்களிடம் கூறினர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு- ஏற்பட்டது.