உள்ளூர் செய்திகள்
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

பழனி அருகே கொடைக்கானல் மலை சாலையில் திடீர் மண் சரிவு

Published On 2022-04-22 11:59 IST   |   Update On 2022-04-22 11:59:00 IST
பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை காரணமாக கொடைக்கானல் மலைச்சாலையில் கோம்பைக்காடு பகுதியில் 4வது கொண்டை ஊசி வளைவில் இன்று அதிகாலை திடீர் மண் சரிவு ஏற்பட்டது.
பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் அதிக அளவு ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்த சாலை வழியாக கொடைக்கானலுக்கு தேவையான பால், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இதே போல் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளும், அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் பழனியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை காரணமாக கொடைக்கானல் மலைச்சாலையில் கோம்பைக்காடு பகுதியில் 4வது கொண்டை ஊசி வளைவில் இன்று அதிகாலை திடீர் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் அந்த சாலையை கடக்க முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அலுவலர்கள் சாலையில் முறிந்து கிடந்த மரம் மற்றும் மண்ணை அப்புறப்படுத்தி தற்காலிகமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மண் சரிவு ஏற்பட்டபோது வாகனங்கள் இப்பகுதியில் இயங்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது பாதை தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.

Similar News