உள்ளூர் செய்திகள்
வேலூர் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றிய கட்சி.

வேலூரில் நெரிசல் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-04-21 15:50 IST   |   Update On 2022-04-21 15:50:00 IST
வேலூரில் நெரிசல் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாநகரின் முக்கிய சாலையாக ஆற்காடு சாலை திகழ்கிறது. இந்த சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளிமாநிலங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையின் இருபுறமும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். பலர் கடைகளின் முன்பே வாகனங்களை நிறுத்தி வந்தனர்.இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக பல வருடங்களாக இருந்து வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில்
இன்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. மாநில நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் மற்றும் அதி காரிகள் மேற்பார்வையில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த கூரைகள் விளம்பர போர்டுகள் சிமெண்ட் சிலாப்புகள் படிக்கட்டுகள் உள்பட அனைத்தையும் அகற்றினர்.

அகற்றப்பட்ட பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டு அங்கிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றபட்டபோது வியாபாரிகள் பலர் தங்களது பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டனர்.

எனினும் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அகற்றினர். ஆற்காடு ரோட்டில் கலெக்டர் அலுவலகம் வரை ஆக்கிரமிப்பு அகற்ற பட உள்ளது.

இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், கருணாகரன் போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆக்கிரமிப்பையொட்டி ஆற்காடு சாலை பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ஆற்காடு ரோட்டில் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் எடுத்துள்ளனர். ஆனால் சாலையோரம் மின்கம்பங்கள் உள்ளது. இந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது. 

மின்கம்பங்களை உடனடியாக அகற்றி சாலையோரம் வைக்கப்பட வேண்டும். அதன் பிறகு அங்கு புதிய சாலை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் இனிவரும் நாட்களில் ஆக்கிரமிப்பு செய்வதை ஓரளவு தடுக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Similar News